நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Thursday, October 14, 2010

DUEL - HOLLYWOOD MOVIE

ஒரு படம் முழுவதும் சீட் நுனியில் அமர்ந்து பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? படத்தில் நடிகர்கள் தவிக்கும் தவிப்பை நீங்களும் உணர்ந்ததுண்டா? படத்தில் நடிகர்கள் எடுக்கும் தப்பான முடிவுகளுக்கு உங்களை அறியாமலே, "போச்சு மாட்டிக்க போறான். இவன் ஏன் இப்படி பண்ணறான்?" என்று கத்தியதுண்டா? படத்தில் வரும் வில்லனை கூட விரும்பியதுண்டா? அப்படி எல்லா அனுபவத்தையும் தரும் ஒரு படத்தை பற்றிதான் சொல்ல போகிறேன். இந்த படம் வெளி வந்து பலகாலம் ஆகிறது. ஆனால் சென்ற ஆண்டுதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்கள்தான் பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையை சேர்ந்தது இந்த படம். படத்தின் பெயர் ட்யுயல் (Duel).


கதை என்னவென்றால், டேவிட் மான் என்னும் ஒரு தொழிலதிபர், பக்கத்து ஊரில் இருக்கும் ஒருவரை தொழில் நிமித்தமாக பார்க்க தனியாக காரில் செல்கிறார். போகும் வழியில் கலிபோர்னியா பாலைவனத்தை கடக்க நேர்கிறது. அவர் போவது பட்ட பகலில் என்றாலும், சாலையில் ஒரு காக்கை குருவி கூட கிடையாது. தன்னந்தனியாக சுள்ளென்று அடிக்கிற வெயிலில் ஜாலியாக கிளம்புகிறார். போகிறவழியில் ஒரு பழைய ட்ரக் ஒன்று ரோடை அடைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் செல்கிறது. மேலும் கரும்புகையை வேறு கக்கியபடி செல்கிறது. அதனை பின் தொடர முடியாமல் ஹாரன் அடித்து ஓய்ந்து, வேறு வழியில்லாமல், சரக்கென்று முந்தி சென்று விடுகிறார் டேவிட். மறுபடியும் பயணம் தொடர்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அவர் முந்திய ட்ரக் அசுர வேகத்தில் அவரை பின் தொடர்ந்து வருகிறது. சரக்கென இவரை முந்திவிட்டு மறுபடியும் ஆமை வேகத்தில் செல்கிறது. கடுப்பான டேவிட் மறுபடியும் முந்துகிறார். பிடித்தது சனி.


ட்ரக் இவரை ஈவ் டீசிங் செய்ய ஆரம்பிக்கிறது. மூர்க்கத்தனமாக துரத்துவது, முட்டுவது போல நெருங்கி வருவது, பின் திடீரென கண்ணில் இருந்து மறைவது என்று மிரட்டுகிறது. வேலை வேட்டியில்லாதவன் எவனோ விளையாடுகிறான் என்று சாலை ஓரக்கடை ஒன்றில் இருக்கும் தொலைபேசியில் போலீஸை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். திடீரென அந்த ட்ரக் பலமாக டெலிபோன் பூத்தில் மோதுகிறது. மயிரிழையில் டேவிட் தப்பிக்கிறார். துரத்துபவன் வேலை வெட்டி இல்லாத சாதாரணமானவன் அல்ல, சரியான பைத்தியகாரன் என்பது புரிகிறது. அவசரமாக காரில் ஏறி பறக்கிறார். மறுபடியும் துரத்தல் விளையாட்டு. இதில் இருந்து எப்படி டேவிட் தப்பித்தார் என்பதைத்தான் ஒன்னரை மணிநேர மிரட்டலாக சொல்லி இருக்கிறார்கள்

படம் முழுவதும் பொட்டல் காட்டில் நீண்ட சாலையிலேயே நடக்கிறது. படத்தின் பெயர் காரணம் படத்தை பார்க்கும்போதே புரிந்துவிடும். படத்தில் ஒரு ஹீரோ அது டேவிட், வில்லன் அந்த ட்ரக். மற்றபடி குறிப்பிடும் படியான நடிகர்கள் யாருமே இல்லை. முதலில் என்னடா கேமராவை காரில் இணைத்து விட்டார்களோ என்று தோன்றும். பின் அதுவே படத்தின் சுவாரசியத்துக்கு உதவியிருக்கிறது. தொண்ணூறுகளின் இறுதியில் சன் டிவியில் மர்மதேசம் என்று ஒரு தொடர் வந்தது. அதில் ஒரு ட்ரக் வரும். இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதே அந்த மர்மதேச ட்ரக். படத்தில் டேவிட் படுகிற அவஸ்தையை நமக்கும் உண்டாக்கி இருப்பார் இயக்குனர். ட்ரக் திடீர் திடீர் என தோன்றுவதால், சாதாரண காட்சிகளில் கூட, திரையில் ஏதாவது ஒரு மூலையில் ட்ரக் வருகிறதா, தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்து விடுவோம். அந்த ட்ரக்கிடம் இருந்து தப்பிக்க நிறைய ஐடியா செய்வார். படம் பார்க்கும் நாமும்தான். ஆனால் அவை புஸ்வானமாகும்போது அந்த ட்ரக் மீது கோபம் வரும் பாருங்கள்? கடைசிவரை அந்த ட்ரக் ட்ரைவர் யார் என்று காட்டாததும் ஒரு சுவை.

சில தகவல்கள்.
இந்த படத்தை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். படம் வெளி வந்த ஆண்டு 1971. இந்த படம் பற்றி ஸ்பீல்பர்க் சொல்லும்போது, "தெரியாத ஒரு எதிரிக்குத்தான் நாம் மிகவும் பயப்படுவோம். அதையே இங்கு பயன் படுத்திகொண்டேன்." என்றார்.
படத்தில் வரும் காரையும், ட்ரக்கையும் மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த காரின் சிகப்பு வண்ணம் சாலையில் தெளிவாக தெரியும். அதே நேரம் அந்த ட்ரக் மங்கலாக தெரியும். படம் பார்ப்பவர்களுக்கு தூரத்தில் வரும் ட்ரக் மங்கலாக தெரியும். அது ட்ரக்கா இல்லை நம் கற்பனையா என்று குழப்புவதற்கு இந்த ஏற்பாடு. அதே போல ட்ரக்கின் ஹெட் லைட்டுகள் பெரியதாக, பார்ப்பதற்கு யாரோ முறைப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணும். இதுவும் ஸ்பீல்பர்க்கின் வேலைதான்.
டேவிட்டாக வருபவர் டென்னிஸ் வீவர். ஓரளவிற்கு தைரியமான ஒரு ஆண்மகன் எப்படி பயப்படுவான் என்பதை காட்டி இருப்பார்.


படம் பலபேரின் பாராட்டுகளை பெற்றதோடல்லாமல் மிகுந்த வெற்றியும் பெற்றது.

குறிப்பிடத்தக்க காட்சிகளாக சாலை ஓரத்தில் நிற்கும் ஸ்கூல் பஸ் காட்சி, ட்ரக் சாலையை மறித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஆகியவையை சொல்லலாம். ஒன்னரை மணிநேர சுவாரசிய பொழுதுபோக்குக்கு கியாரண்டி. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

பின் குறிப்பு 1 : இந்த படத்தைப் பற்றிய இந்த பதிவு வேறு ஒரு blog-ல் இருந்து சுட்டது. அதைப் படித்த பின்புதான் இந்த படத்தைப் பார்த்தேன். பார்த்த பின்பு சொந்தமா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சா, நான் எழுத நினைச்சத ஏற்கனவே அந்த blog-ல் எழுதிட்டதால, அதையே சுட்டு இங்கே போட்டுட்டேன். ஆனால் இந்த படத்தோட youtube link அந்த blog-ல் இல்லை, அதனால இது 100% சுட்டது கிடையாது, so யாரும் royalty கேக்க முடியாது ( எப்படி ஹி ஹி ஹி......)



பின் குறிப்பு 2 : இந்த படத்தைப் பார்க்க ஆங்கில மொழிவளம் தேவையில்லை.

youtube link

Part 1 : http://www.youtube.com/watch?v=a5cEcHZfWDU

Part 2 : http://www.blogger.com/goog_1545224614

Part 3 : http://www.youtube.com/watch?v=9z1wkJBPwAY


Part 4 : http://www.youtube.com/watch?v=_jx-h45TTko

Part 5 : http://www.youtube.com/watch?v=Gs2c_Uq2x64

Part 6 : http://www.youtube.com/watch?v=uBSQyEET8po

Part 7 : http://www.youtube.com/watch?v=LmD0fKh0Bjw

Part 8 : http://www.youtube.com/watch?v=02ZJrwyoVmA

Part 9 : http://www.youtube.com/watch?v=VnkXLLu8A4o

Part10: http://www.youtube.com/watch?v=y0qcWAXgQJg

No comments:

Post a Comment