நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.
Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

Sunday, July 28, 2013

மனிதம் தொலைத்த மதம்- மதம் பிடித்த மனிதன்

நண்பர்களே, தயவுசெய்து இந்த கட்டுரையை படிக்கவும் - மதம் குறித்து எனது பார்வை

       சமீப காலமாக என் மனதில் மிகுந்த அச்சத்தையும், துயரத்தையும் உண்டாக்கிய ஒரு விடயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் ( Facebook, Twitter) பகிரப்படும் மதம் சார்பான கருத்துக்களே.
       ஒருவர் தன் மதத்தைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம், எழுதலாம். அது ஆரோக்கியமானதும் கூட, ஆனால் அதில் மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதும், இகழ்ந்து எழுதுவதும் மிகவும் அபாயகரமானது. கண்டனத்துக்கிரியது. மிக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது இந்து - முஸ்லிம் பற்றியே. இதனால் நம்மிடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி மதத்தின் பெயரால் உண்டாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிலரது அரசியல் நோக்கத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் இந்து - முஸ்லிம் வெறுப்புணர்ச்சி உண்டாக்கப்படுகிறது.
         
       இதனால் நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுசெல்வது என்ன? ஏற்கனவே வருங்காலத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். குறிப்பாக குடிநீர் தடுப்பாடு, புவி வெப்பமயமாதல் - பருவ நிலை மாற்றம், பொருளாதார சிக்கல், மக்கள் தொகைப்பெருக்கம். இதனுடன் அவர்களது மனதிலும் மதம் என்னும் மதத்தை விதைத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மனிதம் கொண்டு எதிர்வரும் சிக்கல்களை ஒன்றிணைந்து களைய போராட வேண்டுமா? சிந்தியுங்கள் நண்பர்களே. தயவுசெய்து மற்ற மதங்களைப் பற்றி இகழ்ந்து கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மற்ற மதத்தினருடன் சகோதரத்துவுடன் பழகுங்கள், அவர்களது மதத்தையும் மதித்து மனிதத்தைப் பேணுங்கள்.ஒருவருக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்றால், அது அநீதி என்று தெரியும் பட்சத்தில் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், மற்ற மதத்தை சார்ந்தவரும் அந்த அநீதிக்கு எதிராக போராடும் சிறந்த குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். மாறாக என் மதத்தை சேர்ந்தவனுக்கு மட்டுமே நான் போராடுவேன் என்று சொல்வது மனிததன்மையற்ற செயல். எந்த கடவுளும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

                  குறிப்பாக சமீபத்தில் ஒரு பா ஜா கா அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சிறுது நிமிடத்தில் அதற்கு அரேபிய வந்தேறிகள்தான்(முஸ்லிம்) காரணமென்று சிலரால் பரப்பப்படுகிறது, அவரது கொலைக்கு காரணம் அரசியல் உள்நோக்கமாக இருக்கலாம் அல்லது வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாக கூட இருக்கலாம். அல்லது அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலையுண்டார் என்றால், கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எந்த கடவுளும் மதத்தின் பெயரால் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார், அப்படி ஏற்றுக்கொண்டால் அவர் கடவுளாக இருக்க முடியாது.
            கொலைக்கான உண்மைக் காரணம் விசாரிக்கப்பட்டு, விரைவில் வெளிவரும். அதற்கு முன்னர் மற்ற மதத்தினரை குறைக்கூறுவது, ஒட்டுமொத்த மதத்தையும் தவறாக சித்தரிப்பது போன்ற காரியங்களை தவிர்ப்போம். இல்லையேல், மதவெறி மக்கள் மனதில் பதிந்து, மிகப்பெரிய கலவரத்திக்கு வழிவகுக்கும். வேண்டாம் இனி ஒரு மதக்கலவரம். ஏற்கனவே மதத்தின் பெயரால் பல குடும்பங்கள் நிர்மூலமானது, பலரது வாழ்க்கை நாசமானது. இனி வரும் தலைமுறையாவது ஒற்றுமையாக வாழ , அமைதியான சூழலை உண்டாக்க முயர்ச்சிப்போமாக.

     ஒரு நாள் வரும், மதம் என்னும் மாயை அழிந்து மனிதம் என்னும் மகத்தான புள்ளியில் நம் அனைவரும் ஒண்றினைந்து வாழும் அந்நாளிற்கான விடியலை நோக்கி நம் பயணப்பட இறைவன் நமக்கு அருள்புரிவானாக.


இப்படிக்கு
காஜா

Saturday, October 23, 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர், கீழேகிடக்கும் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.



"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி."


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

நான் படித்ததில் இருந்து - உங்கள் சிந்தனைக்கு.


மூலம் : http://agalvilakku.blogspot.com/2010/10/blog-post.html 

Monday, October 18, 2010

தாய் - தாரம்

வணக்கம் நண்பர்களே,

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பபட்ட "நீயா நானா" நிகழ்ச்சியைப் பற்றித்தான் இந்த பதிவு.


இந்த வார தலைப்பு " இந்திய கணவன்மார்கள் அம்மா பிள்ளையாக இருப்பது ஏன்"? , கண்டிப்பாக இந்த தலைப்பை ஒட்டிய இந்த நிகழ்ச்சி அனைவரும் பார்க்க பட வேண்டியளவிற்கு, மிகவும் சிறப்பான விவாதத்துடன் நடைப்பெற்றது.

முதலில், நாம் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தாய் மகன் மீதோ, மகன் தாய் மீதோ கொண்டுள்ள அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இது ஒரு இயற்கையான விஷயம்தான், தாய் பத்து மாசம் சுமக்கிறாள், இருபத்தைந்து வருஷம் பேணி பாதுகாக்குறாள், அதற்கு நன்றி கடனாக மீதமுள்ள காலங்களில் மகன் தாயை போற்றி பாதுகாக்கணும்னு நினைக்கிறான், அதாவது, தன் நன்றி கடனை திருப்பி செலுத்துறான். அப்படி நன்றி கடனை திருப்பி செலுத்துறவன்தான் உண்மையான மகனும் கூட. so, இது ஒரு இயற்கையான விஷயம், இரத்த சொந்தத்தில் வந்த உறவு, அதனால தாய் , மகன் அன்பு என்பது தவிர்க்க முடியாததும்கூட.


ஆனால், மனைவி என்பவள் எந்த சொந்தமும் இல்லாமல் வந்தவள். முன்பின் பரிச்சயம் இல்லாத ஒரு ஆணை நேற்று பார்த்து , இன்று திருமணம் செய்து, இனி வரும் காலம் முழுவதும் அவனுடன்தான் தன் வாழ்க்கையென்று, தன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் தம் உறவினர்கள் எல்லோரையும் விட்டு, உங்களுடன் வந்து வாழும் ஒரு உயிர். உங்களுக்காக தன் உயிரையும் கொடுக்கக்கூடிய ஒரு உன்னத உயிர். அந்த மனைவியின் அன்பிற்கு கைமாறா கணவனாகியா , நீங்க என்ன செய்ய போறீங்க? மனைவியின் அன்பு என்பது , தாயின் அன்பை விட ஒரு படி மேலானது என்பது என் கருத்து.


இதற்கு , என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியையே என்னால் உதாரணமாக சொல்ல முடியும். ஒரு ரமலான் திருவிழா நாள் அன்று, நான், என் சகோதரர்கள், என் தந்தை அனைவரும் புத்தாடை உடுத்திக்கொண்டு பள்ளிவாசலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பினோம். அப்பொழுது என் தாய் , நாங்கள் புத்தாடை உடுத்திக்கொண்டு சென்று வந்ததால், திருஷ்டி படாமலிருக்க எங்களுக்கு ஆரத்தி எடுத்தார். அப்போது என் தந்தை அந்த ஆரத்தி தட்டை, என் தாயிடமிருந்து வாங்கி , என் தாயிற்கு ஆரத்தி எடுத்தார். திருவிழாவாகிய அன்று அவளும்தானே புத்தாடை உடுத்தியிருக்கிறாள், அவளுக்கும் திருஷ்டி படுமல்லவா? என்று என் தந்தைக்கு தோன்றிய அந்த எண்ணம், ஒரு மகனாகிய எனக்கு தோன்றவில்லை.


என்னை பொருத்தவரை, நல்ல கணவன்-மனைவி உறவு என்பது, தாய்-மகன் உறவை விட மேலானது. அதற்காக தாயிடம் அன்பு செலுத்த வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஒரு நல்ல கணவன் என்பவன், தாயையும், மனைவியையும் சரிவிகிதத்தில் போற்ற வேண்டும், இதில் பாரபட்சம் காட்டுவானாயின், அவன் நல்ல கணவனாகவும் இருக்க முடியாது. நல்ல மகனாகவும் இருக்க முடியாது.


( தமிழ் விவாத நிகழ்ச்சியிலே,"நீயா நானா" நிகழ்ச்சிதான் பல பயனுள்ள மற்றும் உணர்வுபூர்வமான தலைப்புகளை கையாண்டு, பல சுவாரசியமான தகவல்களை தந்திருக்கிறது. ஆனால், சிலசமயம் சிலரது கருத்துக்களால், அவர்கள் அவமானபடுத்தப்படுவது போலும், அசெளகர்யமான நிலைக்கு தள்ளபடுவது போலும் , எனக்கு தோன்றுகிறது. இதை தவிர்த்துக்கொண்டால் இந்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக வெற்றியடையும்.)


இதைப்பற்றிய உங்கள் கருத்தையும் நீங்கள் பின்னூட்டமிடலாம்.