நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Monday, October 18, 2010

தாய் - தாரம்

வணக்கம் நண்பர்களே,

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பபட்ட "நீயா நானா" நிகழ்ச்சியைப் பற்றித்தான் இந்த பதிவு.


இந்த வார தலைப்பு " இந்திய கணவன்மார்கள் அம்மா பிள்ளையாக இருப்பது ஏன்"? , கண்டிப்பாக இந்த தலைப்பை ஒட்டிய இந்த நிகழ்ச்சி அனைவரும் பார்க்க பட வேண்டியளவிற்கு, மிகவும் சிறப்பான விவாதத்துடன் நடைப்பெற்றது.

முதலில், நாம் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தாய் மகன் மீதோ, மகன் தாய் மீதோ கொண்டுள்ள அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இது ஒரு இயற்கையான விஷயம்தான், தாய் பத்து மாசம் சுமக்கிறாள், இருபத்தைந்து வருஷம் பேணி பாதுகாக்குறாள், அதற்கு நன்றி கடனாக மீதமுள்ள காலங்களில் மகன் தாயை போற்றி பாதுகாக்கணும்னு நினைக்கிறான், அதாவது, தன் நன்றி கடனை திருப்பி செலுத்துறான். அப்படி நன்றி கடனை திருப்பி செலுத்துறவன்தான் உண்மையான மகனும் கூட. so, இது ஒரு இயற்கையான விஷயம், இரத்த சொந்தத்தில் வந்த உறவு, அதனால தாய் , மகன் அன்பு என்பது தவிர்க்க முடியாததும்கூட.


ஆனால், மனைவி என்பவள் எந்த சொந்தமும் இல்லாமல் வந்தவள். முன்பின் பரிச்சயம் இல்லாத ஒரு ஆணை நேற்று பார்த்து , இன்று திருமணம் செய்து, இனி வரும் காலம் முழுவதும் அவனுடன்தான் தன் வாழ்க்கையென்று, தன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் தம் உறவினர்கள் எல்லோரையும் விட்டு, உங்களுடன் வந்து வாழும் ஒரு உயிர். உங்களுக்காக தன் உயிரையும் கொடுக்கக்கூடிய ஒரு உன்னத உயிர். அந்த மனைவியின் அன்பிற்கு கைமாறா கணவனாகியா , நீங்க என்ன செய்ய போறீங்க? மனைவியின் அன்பு என்பது , தாயின் அன்பை விட ஒரு படி மேலானது என்பது என் கருத்து.


இதற்கு , என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியையே என்னால் உதாரணமாக சொல்ல முடியும். ஒரு ரமலான் திருவிழா நாள் அன்று, நான், என் சகோதரர்கள், என் தந்தை அனைவரும் புத்தாடை உடுத்திக்கொண்டு பள்ளிவாசலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பினோம். அப்பொழுது என் தாய் , நாங்கள் புத்தாடை உடுத்திக்கொண்டு சென்று வந்ததால், திருஷ்டி படாமலிருக்க எங்களுக்கு ஆரத்தி எடுத்தார். அப்போது என் தந்தை அந்த ஆரத்தி தட்டை, என் தாயிடமிருந்து வாங்கி , என் தாயிற்கு ஆரத்தி எடுத்தார். திருவிழாவாகிய அன்று அவளும்தானே புத்தாடை உடுத்தியிருக்கிறாள், அவளுக்கும் திருஷ்டி படுமல்லவா? என்று என் தந்தைக்கு தோன்றிய அந்த எண்ணம், ஒரு மகனாகிய எனக்கு தோன்றவில்லை.


என்னை பொருத்தவரை, நல்ல கணவன்-மனைவி உறவு என்பது, தாய்-மகன் உறவை விட மேலானது. அதற்காக தாயிடம் அன்பு செலுத்த வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஒரு நல்ல கணவன் என்பவன், தாயையும், மனைவியையும் சரிவிகிதத்தில் போற்ற வேண்டும், இதில் பாரபட்சம் காட்டுவானாயின், அவன் நல்ல கணவனாகவும் இருக்க முடியாது. நல்ல மகனாகவும் இருக்க முடியாது.


( தமிழ் விவாத நிகழ்ச்சியிலே,"நீயா நானா" நிகழ்ச்சிதான் பல பயனுள்ள மற்றும் உணர்வுபூர்வமான தலைப்புகளை கையாண்டு, பல சுவாரசியமான தகவல்களை தந்திருக்கிறது. ஆனால், சிலசமயம் சிலரது கருத்துக்களால், அவர்கள் அவமானபடுத்தப்படுவது போலும், அசெளகர்யமான நிலைக்கு தள்ளபடுவது போலும் , எனக்கு தோன்றுகிறது. இதை தவிர்த்துக்கொண்டால் இந்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக வெற்றியடையும்.)


இதைப்பற்றிய உங்கள் கருத்தையும் நீங்கள் பின்னூட்டமிடலாம்.

No comments:

Post a Comment